Type Here to Get Search Results !

இயல் 4-தமிழ்-7ம் வகுப்பு-அறிவியல் ஆக்கம்-குறிப்புகள் iyal-4-7th-tamil-ariviyal-akkam

இயல் 4-7ம் வகுப்பு-அறிவியல் ஆக்கம்

tnpsc tamil notes
table of contents(toc)

கலங்கரை விளக்கம்

⚔  வானம் ஊன்றிய மதலை போல
     ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி
     விண்பொர நிவந்த வேயா மாடத்து
     இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி
     உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும்
     துறை…….  -கடியலூர் உருத்திரங் கண்ணனார்

சொல்லும் பொருளும்

  • மதலை     - தூண் 
  • சென்னி     - உச்சி
  • ஞெகிழி     - தீச்சுடர் 
  • உரவுநீர்     - பெருநீர்ப் பரப்பு
  • அழுவம்     - கடல் 
  • கரையும்     - அழைக்கும் 
  • வேயா மாடம் - வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது,  (திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்.)

நூல் வெளி

  • கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககாலப் புலவர்.
  • இவர் கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர். 
  • இவர் பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். 
  • பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன்.

ஆற்றுப்படை

  • வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும்

பத்துப்பாட்டு நூல்கள்

  1. திருமுருகாற்றுப்படை 
  2. மதுரைக்காஞ்சி 
  3. பொருநராற்றுப்படை 
  4. நெடுநல்வாடை 
  5. பெரும்பாணாற்றுப்படை 
  6. குறிஞ்சிப்பாட்டு 
  7. சிறுபாணாற்றுப்படை 
  8. பட்டினப்பாலை 
  9. முல்லைப்பாட்டு  
  10. மலைபடுகடாம்

கவின்மிகு கப்பல்

⚔  உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்
     புலவுத்திரைப் பெருங்கடல் நீர்இடைப் போழ
     இரவும் எல்லையும் அசைவுஇன்று ஆகி
     விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்ட
     கோடுஉயர் திணிமணல் அகன்துறை நீகான்
     மாட ஒள்எரி மருங்குஅறிந்து ஒய்ய- மருதன் இளநாகனார்

சொல்லும் பொருளும்

  • உரு           – அழகு 
  • வங்கம்    – கப்பல் 
  • போழ      – பிளக்க 
  • எல்            – பகல் 
  • வங்கூழ்   – காற்று 
  • கோடு உயர்  – கரை உயர்ந்த 
  • நீகான்    – நாவாய் ஓட்டுபவன் 
  • மாட ஒள்ளெரி - கலங்கரை விளக்கம்

நூல் வெளி

  • மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். 
  • கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள 35 பாடல்களையும் பாடியுள்ளார். 
  • மருதத்திணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார்- என அழைக்கப்படுகிறார்.

அகநானூறு

  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. 
  • புலவர் பலரால் பாடப்பட்ட 400 பாடல்களைக் கொண்டது.  
  • இந்நூலினை நெடுந்தொகை என்றும்

எட்டுத்தொகை நூல்கள்

  1. நற்றிணை 
  2. குறுந்தொகை 
  3. ஐங்குறுநூறு 
  4. பதிற்றுப்பத்து 
  5. பரிபாடல் 
  6. கலித்தொகை 
  7. அகநானூறு 
  8. புறநானூறு.

தமிழரின் கப்பற்கலை

  • தொல்காப்பியம்- முந்நீர் வழக்கம் என்று கடற்பயணத்தைக் குறிப்பிடுகிறது. 
  • கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து (குறள் 496) திருக்குறள், திருவள்ளுவர். 
  • பூம்புகார் துறைமுகத்தில் -கப்பல்கள் மூலம் ஏற்றுமதி இறக்குமதி நடந்தன என - பட்டினப்பாலை கூறுகிறது. 
  • உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்- (பாடல் 255) என்று பெரிய கப்பலை அகநானூறு கூறுகிறது. 
  • அருங்கலம் தரீஇயர் நீர்மிசை  பெருங்கலி வங்கம் (பாடல் 52) -பதிற்றுப்பத்து 
  • சேந்தன் திவாகரம் என்னும் நிகண்டு நூலில் பலவகையான கப்பல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன 
  • தமிழர்கள் தோணி, ஓடம், படகு, புணை, மிதவை, தெப்பம் போன்றவற்றைச் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தினர். 
  • கலம், வங்கம், நாவாய் முதலியவை அளவில் பெரியவை. இவற்றைக் கொண்டு தமிழர்கள் கடல் பயணம் மேற்கொண்டனர். 
  • நியூசிலாந்து நாட்டு வெலிங்டன் அருங்காட்சியகத்தில் பழங்காலத் தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி ஒன்று இடம்பெற்றுள்ளது. 
  • கப்பல் கட்டும் கலைஞர்கள்- கம்மியர் 
  • “கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஉய்” (காதை 25, அடி 124) - மணிமேகலை.

கப்பல் கட்டும் மரங்கள்

  • நீர்மட்ட வைப்பிற்கு வேம்பு, இலுப்பை, புன்னை, நாவல் போன்ற மரங்களையும் பக்கங்களுக்குத் தேக்கு, வெண்தேக்கு மரங்களையும் பயன்படுத்தினர். 
  • மரத்தின் வெட்டப்பட்ட பகுதியை வெட்டுவாய் என்பர். அதன் நிறத்தைக் கொண்டு மரத்தின் தன்மையை அறிவர். 
  • கண்ணடை என்பது இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் ஆகும். 
  • சுழி உள்ள மரங்களைத் தவிர்த்தனர். 
  • இவற்றைத் தச்சுமுழம் என்னும் நீட்டலளவையால் கணக்கிட்டனர். 
  • பெரிய படகுகளில் முன்பக்கத்தை யானை, குதிரை, அன்னம் முதலியவற்றின் தலையைப் போன்று வடிவமைத்தனர். 
  • அதனைக் கரிமுக அம்பி, பரிமுக அம்பி என்று அழைக்கப்பட்டன

மற்ற பொருட்கள்

  • மரங்களையும் பலகைகளையும் இணைக்க இடையே தேங்காய் நார், பஞ்சு ஆகியவை பயன்படுத்தினர். 
  • சுண்ணாம்பையும் சணலையும் அரைத்துச் சேர்த்து எண்ணெய் கலந்து கப்பலின் அடிப்பகுதியில் பூசியதால் கப்பல் பழுதடையாமல் நெடுங்காலம் உழைத்தன. 
  • இம்முறையை இத்தாலி நாட்டைச் சேர்ந்த மார்க்கோபோலோ என்னும் கடற்பயணி பாராட்டியுள்ளார். 
  • மரத்தினாலான ஆணிகள் -தொகுதி என்பர்.

பலவகை பாய்மரங்கள்

  • பெரியபாய்மரம், திருக்கைத்திப் பாய்மரம், காணப் பாய்மரம், கோசுப் பாய்மரம் போன்ற பாய்மரங்களைத் தமிழர் பயன்படுத்தினர்.

பாய்மரங்களைக் கட்டும் கயிறு வகை

  • ஆஞ்சான் கயிறு, தாம்பாங்கயிறு, வேடாங்கயிறு, பளிங்கைக் கயிறு, மூட்டங்கயிறு, இளங்கயிறு, கோடிப்பாய்க்கயிறு. 
  • பாய்மரக் கப்பலின் பாய், கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்பட்டால் மரப்பிசின் கொண்டு இணைத்தனர் என்று பரிபாடல்  கூறுகிறது.

கப்பலின் உறுப்புகள்

  • எரா, பருமல், வங்கு, கூம்பு, பாய்மரம், சுக்கான், நங்கூரம்
  1. கப்பலின் முதன்மையான உறுப்பு அடிமரம் எரா எனப்படும். 
  2. குறுக்கு மரம் பருமல் என்பர். 
  3. கப்பலைச் செலுத்தவும் உரிய திசையில் திருப்பவும் பயன்படும் முதன்மையான கருவி சுக்கான் எனப்படும். 
  4. கப்பலை நிலையாக ஓரிடத்தில் நிறுத்த வைக்க உதவும் உறுப்பு நங்கூரம் ஆகும். 
  5. சமுக்கு என்னும் ஒரு கருவியைக் கப்பல்களில் பயன்படுத்தினர் என்று கப்பல் சாத்திரம் என்னும் நூல் குறிப்பிடுகிறது. இது காந்த ஊசி பொருத்தப்பட்ட திசைகாட்டும் கருவியாக இருக்கலாமென ஆய்வாளர்கள் கருத்து. 
  • கப்பல் செலுத்துபவர்- மாலுமி, மீகாமன், நீகான், கப்பலோட்டி

கப்பலைச் செலுத்தும் முறை

  • நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளி தொழில் ஆண்ட உரவோன் மருக” (பாடல் 66)- புறப்பாடல் அடிகளில் வெண்ணிக்குயத்தியார் குறிப்பிடுகிறார். 
  • கடலில் காற்று வீசும் திசை, கடல் நீரோட்டங்களின் திசை ஆகியவற்றைத் தமிழர்கள் அறிந்து உரிய திசையில் கப்பலைச் செலுத்தினர். 
  • கலம் = கப்பல், கரைதல் = அழைத்தல். கப்பலை அழைக்கும் விளக்கு என்னும் பொருளில் கலங்கரை விளக்கம் எனப்பட்டது.
  • கலம் தந்த பொற்பரிசம் கழித்தோணியால் கரை சேர்க்குந்து (பாடல் 343) என்று புறநானூறு கூறுகிறது. 
  • ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களைப் 12ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும். ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களை 50ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை” என்று வாக்கர் என்னும் ஆங்கிலேயர் கூறியுள்ளார்.

ஆழ்கடலின் அடியில்

  • அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் ஜூல்ஸ் வெர்ன். 
  • பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். 
  • அறிவியல் கண்டுபிடிப்புகள் பல கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே அவற்றைப் பற்றித் தமது புதினங்களில் எழுதியவர்.

•    படைப்புகள்-எண்பது நாளில் உலகத்தைச் சுற்றி, பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம் ஆழ்கடலின் அடியில் புதினங்கள்.
 

இலக்கியவகைச் சொற்கள்

  • ஓர் எழுத்து தனித்தும் ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தும் வந்து பொருள் தருவது சொல் எனப்படும். 
  • மொழி, பதம், கிளவி என்பன சொல் என்னும் பொருள் தரும் வேறு சொற்களாகும் 
  • இலக்கண முறைப்படி பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் எனச் சொற்கள் நான்கு வகைப்படும். 
  • இலக்கிய வகையில் சொற்களை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

இயற்சொல்

  • கடல், கப்பல், எழுதினான், படித்தான்.  இவ்வாறு எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும். 
  • இயற்சொல் பெயர், வினை, இடை,  உரி ஆகிய நான்கு வகையிலும் வரும்.
  1. மண், பொன்         - பெயர் இயற்சொல் 
  2. நடந்தான், வந்தான்     -வினை இயற்சொல் 
  3. அவனை, அவனால்     -இடை இயற்சொல் 
  4. மாநகர்         -உரி இயற்சொல்

திரிசொல்

  • வங்கூழ், அழுவம், சாற்றினான், உறுபயன் - எனும் சொற்களுக்குக் காற்று, கடல், சொன்னான், மிகுந்த பயன் எனப் பொருள் தரும். 
  • கற்றோர்க்கு மட்டுமே விளங்குபவையாகவும் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருபவையாகவும் அமைவது திரிசொற்கள் எனப்படும். 
  • திரிசொல் பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகையிலும் வரும்.
  1.  அழுவம், வங்கம்                  -பெயர்த் திரிசொல்
  2. இயம்பினான், பயின்றாள்-வினைத் திரிசொல்
  3. அன்ன, மான                       - இடைத் திரிசொல்
  4. கூர், கழி                         - உரித் திரிசொல்
  • ஒரு பொருள்குறித்த பல திரிசொற்கள் - வங்கம், அம்பி, நாவா = கப்பல் 
  • பல பொருள்குறித்த ஒரு திரிசொல் இதழ் என்னும் சொல் பூவின் இதழ், உதடு, கண்ணிமை, பனையேடு, நாளிதழ்

திசைச்சொல்

  • சாவி, சன்னல், பண்டிகை, இரயில் முதலிய சொற்கள் தமிழில் வழக்கில் இருந்தாலும் இவை தமிழ்ச் சொற்கள் அல்ல. 
  • இவ்வாறு வடமொழி தவிர, பிற மொழிகளிலிருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் திசைச்சொற்கள் எனப்படும். 
  • முற்காலத்தில் பாண்டிநாட்டைத் தவிர, பிற பகுதிகளில் வழங்கிய கேணி(கிணறு), பெற்றம் (பசு) போன்ற சொற்களையும் திசைச்சொற்கள் என்றே வழங்கினர்.

வடசொல்

  • வருடம், மாதம், கமலம், விடம், சக்கரம் முதலிய சொற்கள் தமிழில் வழக்கில் இருந்தாலும் இவை தமிழ்ச்சொற்கள் அல்ல. வடமொழி எனப்படும் சமஸ்கிருதமொழிச் சொற்கள் ஆகும். 
  • இவ்வாறு வடமொழியிலிருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் வடசொற்கள் எனப்படும்.
  •  தற்சமம், தற்பவம் - இருவகை
  1. கமலம், அலங்காரம் என வடமொழியில் இருப்பது போன்றே தமிழில் எழுதுவதைத் தற்சமம் என்பர். 
  2. லக்ஷ்மி என்பதை இலக்குமி என்றும், விஷம் என்பதை விடம் என்றும் தமிழ் எழுத்துகளால் மாற்றி எழுதுவதைச் தற்சமம்  என்பர்
  • காலம் மூன்று வகைப்படும்
  1. இறந்த காலம்
  2. நிகழ் காலம்
  3. எதிர் காலம்
  • நடந்த செயலைக் குறிப்பது இறந்த காலம் (நடந்தான்) 
  • நடக்கின்ற செயலைக் குறிப்பது நிகழ்காலம் (பார்க்கிறான், ஆடுகிறது) 
  • நடக்கவிருக்கும்  செயலைக் குறிப்பது எதிர் காலம் (பறக்கும், ஆடும்)

கலைச்சொல் அறிவோம்

  • கலங்கரை விளக்கம்  - Lighthouse
  • துறைமுகம்                    - Harbour
  • பெருங்கடல்                  - Ocean
  • புயல்                                 - Storm
  • மாலுமி                            - Sailor
  • நங்கூரம்                        - Anchor
  • நீர்மூழ்கிக்கப்பல்     - Submarine
  • கப்பல்தளம்               - Shipyard
  • கப்பல் தொழில்நுட்பம் - Marine technology
  • கடல்வாழ் உயிரினம்- Marine creature



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.