இயல் 5 -தமிழ் - 7ம் வகுப்பு
ஓதுவது ஒழியேல்
இன்பத்தமிழ்க் கல்வி
- ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட
என்னை எழுதென்று சொன்னது வான்
ஓடையும் தாமரைப் பூக்களும் ….
……துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில்
தூய்மை உண்டாகிடும் வீரம் வரும் - பாரதிதாசன்
சொல்லும் பொருளும்
- எத்தனிக்கும் – முயலும்
- பரிதி – கதிரவன்
- வெற்பு - மலை
- அன்னதோர் – அப்படிஒரு
- கழனி – வயல்
- கார்முகில் – மழைமேகம்
- நிகர் – சமம்
- துயின்றிருந்தார் – உறங்கியிருந்தார்
பொதுவான குறிப்புகள்
- பாரதிதாசன் படைப்புகள்- பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிக் காப்பியம்.
- இவர் எழுதிய பிசிராந்தையார் என்னும் நாடகநூலுக்குச் சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது.பாரதிதாசன் கவிதைகள் (தமிழ்ப்பேறு - உட்தலைப்பு)
அழியாச் செல்வம்
- வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை
மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்
எச்சம் எனவொருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற்று அல்ல பிற. -சமண முனிவர்.
சொல்லும் பொருளும்
- வைப்புழி - பொருள் சேமித்து வைக்கும் இடம்
- கோட்படா -ஒருவரால் கொள்ளப்படாது
- வாய்த்து ஈயில் - வாய்க்கும்படி கொடுத்தலும்
- விச்சை - கல்வி
பொதுவான குறிப்புகள்
- நாலடியார் சமண முனிவர்களால் எழுதப்பட்ட நூலாகும்.
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
- இது நானூறு வெண்பாக்களால் ஆனது.
- இந்நூலை நாலடி நானூறு என்றும், வேளாண்வேதம் என்றும் அழைப்பர்.
- திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது.
- இந்நூல் திருக்குறளுக்கு இணையாக கருதினர்-நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
- வெள்ளத்தால் அழியாது வெந்தணலால் வேகாது வேந்த ராலும்
கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைவு றாதுகள்ளர்க்கோ பயமில்லை காவலுக்கு மிகஎளிது கல்வி யென்னும்
உள்ளபொருள் உள்ளிருக்கப் புறத்தேயோர் பொருள்தேடி உழல்கின் றீரே - தனிப்பாடல் திரட்டு - (பழைய புத்தகம் -குமரகுருபரர் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் இவரின் நூல்கள் கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்.இவற்றுள் நீதிநெறி விளக்கம் கடவுள் வாழ்த்து உட்பட 102 செயல்கள் கொண்டது.)
வாழ்விக்கும் கல்வி,
- திருக்குறள் வகுப்புகள், தொடர் சொற்பொழிவுகள்மூலம் திருக்குறளைப் பரப்பும் பணி செய்தவர் திருக்குறளார் வீ.முனிசாமி.
- படைப்புகள் - வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை.சிந்தனைக் களஞ்சியம்.
- உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் நூல் - பெரும் புகழ் பெற்றது.
பள்ளி மறுதிறப்பு
- சுப்ரபாரதிமணியன். இவர் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துகளை வலியுறுத்திச் சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றை எழுதியுள்ளார்;
- கனவு என்னும் இலக்கிய இதழை நடத்தி வருகிறார்.
- படைப்புகள் - பின்னல், வேட்டை, தண்ணீர் யுத்தம், புத்துமண், கதை சொல்லும் கலை
ஓரெழுத்து ஒருமொழி,பகுபதம், பகாப்பதம்
ஓரெழுத்து
- நன்னூல் - எழுதிய பவணந்தி முனிவர்
- தமிழில் 42 ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன.
- நொ, து ஆகிய இரண்டு சொற்களைத்தவிர ஏனைய 40 சொற்களும் நெடில் எழுத்துக்கள்.
1. ஆ- பசு
2. ஈ- கொடு
3. ஊ- இறைச்சி
4. ஏ- அம்பு
5. ஐ- தலைவன்
6. ஓ - மதகுநீர் தாங்கும் பலகை
7. கா- சோலை
8. கூ- பூமி
9. கை- ஒழுக்கம்
10. கோ-அரசன்
11. சா- இறந்துபோ
12. சீ- இகழ்ச்சி
13. சே- உயர்வு
14. சோ- மதில்
15. தா- கொடு
16. தீ- நெருப்பு
17. தூ- தூய்மை
18. தே- கடவுள்
19. தை- தைத்தல்
20. நா- நாவு
பகுபதம்
- படித்தான் என்னும் சொல்லைப் படி + த் + த் + ஆன் எனப் பிரிக்கலாம். சிறுசிறு உறுப்புகளாகப் பிரிக்கும் வகையில் அமையும் சொற்களைப் பகுபதங்கள் என்பர்.
- பிரிக்கப்படும் உறுப்புகளைப் பகுபத உறுப்புகள் என்பர்.
பெயர்ப்பகுபதம்
- பகுபதமாக அமையும் பெயர்ச்சொல் பெயர்ப்பகுபதம் ஆகும்.
- இதனை, பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் என ஆறு வகைப்படுத்துவர்.
(எ.கா.)
- பொருள் - பொன்னன் (பொன் + அன்)
- இடம் - நாடன் (நாடு + அன்)
- காலம் - சித்திரையான் (சித்திரை + ஆன்)
- சினை - கண்ணன் (கண் + அன்)
- பண்பு - இனியன் (இனிமை + அன்)
- தொழில் – உழவன் (உழவு + அன்)
வினைப்பகுபதம்
- பகுபதமாக அமையும் வினைச்சொல் வினைப்பகுபதம் ஆகும்.
(எ.கா.)
உண்கின்றான் – உண் + கின்று + ஆன்
பகுபத உறுப்புகள்
- ஆறு வகைப்படும்.
- அவை பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்.
- முதலில் அமைந்து முதன்மையான பொருளைத் தருவது பகுதி. இது கட்டளையாகவே அமையும்.
- இறுதியில் அமைந்து திணை, பால், எண், இடம், முற்று, எச்சம் காட்டுவது விகுதி.
- பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்து காலம் / எதிர்மறையைக் காட்டுவது இடைநிலை.
- பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்துச் சந்தி எனப்படும்.
- இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் சாரியை எனப்படும்.
- பகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும்.
(எ.கா.)
- வந்தனன் – வா(வ) + த்(ந்) + த் + அன் + அன்
- வா - பகுதி. இது வ எனக் குறுகி இருப்பது விகாரம்
- த் - சந்தி. இது ந் எனத் திரிந்து இருப்பது விகாரம்
- த் - இறந்தகால இடைநிலை
- அன் - சாரியை
- அன் - ஆண்பால் வினைமுற்று விகுதி.
பகாப்பதம்
- மரம், கழனி, உண், எழுது - இவ்வாறு பகுபத உறுப்புகளாகப் பிரிக்கமுடியாத சொல் பகாப்பதம் எனப்படும்.
- இவை அடிச்சொல் அல்லது வேர்ச்சொல்லாக இருக்கும்.
- பெயர், வினை, இடை, உரி ஆகிய 4 வகை
(எ.கா.)
- பெயர்ப் பகாப்பதம் – நிலம், நீர், நெருப்பு, காற்று.
- வினைப் பகாப்பதம் - நட, வா, படி, வாழ்.
- இடைப் பகாப்பதம் - மன், கொல், தில், போல்.
- உரிப் பகாப்பதம் - உறு, தவ, நனி, கழி
மூவிடம்
- இடம் மூன்று வகைப்படும். அவை 1. தன்மை 2. முன்னிலை 3. படர்க்கை.
தன்மை
- தன்னைக் குறிப்பது தன்மை.
- (எ.கா.) நான், நாம், நாங்கள், என், எம், எங்கள்.
முன்னிலை
- முன்னால் இருப்பவரைக் குறிப்பது முன்னிலை.
- (எ.கா.) நீ, நீங்கள், நீர், நீவிர், உன், உங்கள்.
படர்க்கை
- தன்னையும், முன்னால் இருப்பவரையும் அல்லாமல் மூன்றாமவரைக் குறிப்பது படர்க்கை.
- (எ.கா.) அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை, இவன், இவள், இவை.
கலைச்சொல் அறிவோம்.
- கோடை விடுமுறை - Summer Vacation
- நீதி - Moral
- குழந்தைத் தொழிலாளர் - Child Labor
- சீருடை - Uniform
- பட்டம் - Degree
- வழிகாட்டுதல் - Guidance
- கல்வியறிவு - Literacy
- ஒழுக்கம் - Discipline